search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீராணம் ஏரி நிரம்புதல்"

    வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து சென்னையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 55கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரி விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்குகிறது. மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் வசதிக்காக 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. போதிய மழை இல்லாததாலும், காவிரி தண்ணீர் வராததாலும் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வந்தது. அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறந்து விடப்பட்டது. இதையடுத்து வடவாறு வழியாக 27-ந்தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 900 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.80 அடியாக இருந்தது. இன்று அது 46.70 அடியாக உள்ளது. வீராணம் ஏரி நிரம்பி தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைப்பதற்காக சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு கடந்த 30-ந் தேதி காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்ப அதிகாரிகள் முன்னிலையில் முன்னேற்பாடு பணிகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் வீராணம் ஏரி நிரம்பியதாலும், தண்ணீர் அதிக அளவு உள்ளதாலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏரியில் இருந்து சென்னைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு இனி வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்போது வீராணம் ஏரி பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்போதைக்கு ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டாம் . பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி முடிந்ததும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தற்போது விவசாயத்துக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. #VeeranamLake
    ×